மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன ஊழல்: மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!
தங்கம் விலைக்கு நிகராக உயரும் தேங்காய் விலை!
ஏற்றுமதி, தேங்காய் உற்பத்தி பாதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால், சந்தைகளுக்கு வரும் தேங்காய் அளவு குறைந்திருப்பதால், தங்கம் விலைக்கு நிகராக தேங்காய் விலையும் உயர்ந்து வருகிறது.
ஒரு பக்கம், சமையலுக்கு மிகவும் தேவையான வெங்காயம், தக்காளி விலைகள் உயர்ந்து, இல்லத்தரசிகளின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய துண்டு விழக் காரணமாக இருக்கும் நிலையில், சப்தமே இல்லாமல், ஒரு கிலோ தேங்காய் விலை ரூ.100 என்ற அளவுக்கு உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது, சென்னையில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில், ஒரு தேங்காய் எடுத்தால் அதை தராசில் வைத்து 500 கிராம் இருந்தால் ரூ.50 என்று விலை நிர்ணயம் செய்கிறார்கள்.
ஏதோ வாழைப்பழம் போன்றவற்றை தராசில் போட்டார்கள், மக்கள் சகித்துக்கொண்டு வாங்கினார்கள். இப்போது தேங்காயையும் எடைத்தராசில் போடும்போது அதன் எடையுடன், வாங்குவோரின் மனதும் சேர்த்து கனத்து, எடை கூடி விடுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
அதாவது, கடந்த நான்கு மாதங்களில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இருந்து வரும் தேங்காய்களின் கொள்முதல் விலை கிலோருக்கு ரூ.25ல் இருந்து ரூ.57 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த டிசம்பர் மாத நிலவரம்தான்.
ஒட்டுமொத்த தமிழகத்துக்கு தேங்காய் கொடுக்கும் பகுதியாக பொள்ளாச்சி இருக்கிறது. பொள்ளாச்சியிலிருந்து கேரளம், சென்னை, கோவை, மதுரை என பல இடங்களுக்கு தேங்காய் அனுப்பி வைக்கப்படுகிறது.
முதலில், பூச்சி தாக்குதல் போன்றவற்றால் தேங்காய் உற்பத்தி பாதிப்பு, நேராக விவசாயிகளிடமிருந்து சந்தைக்கு வராமல், பல இடைத்தரகர்கள் செயல்படுவது, போக்குவரத்துச் செலவு என பலவும் சேர்ந்து தேங்காய் விலையை இரட்டிப்பாக்கியிருக்கிறதாம்.
அதாவது ஒரு விவசாயிக்கு ஒரு கிலோ தேங்காய்க்கு ரூ.60 கிடைத்தால், அது சில்லறை விற்பனைக்கு வரும் போது ஒரு கிலோ ரூ.90 ஆகிவிடுகிறது. ஏன் ரூ.100ம் ஆகிவிடுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் பாமாயில், சோயாமீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்க்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டபோது, தேங்காய் விலை உயர்ந்தது. அது முதல் படிப்படியாக அதிகரித்துக்கொண்டு வந்துள்ளது என்கின்றன தரவுகள்.
அதுபோல, சேலம் சந்தைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய்கள் நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக சேலத்துக்கு 500 டன்னுக்கும் அதிகமாக தேங்காய்கள் விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது வட மாநிலங்களில் தேங்காய் விளைச்சல் பாதித்துள்ளதால், தமிழகத்தில் இருந்து தேங்காய் அதிகளவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
சேலம் சந்தைகளுக்கு தேங்காய் வரத்து முன்பை காட்டிலும் பாதியாக சரிந்துள்ளது. இதனால் தேங்காய் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சேலத்தில் கிலோ ரூ. 45 க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் விலை படிப்படியாக அதிகரித்து கடந்த மாதம் கிலோ ரூ.55 ஆக உயா்ந்தது.
தற்போது விலை மேலும் அதிகரித்து ரூ. 60 முதல் ரூ. 70 வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். விலை உயா்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலங்களுக்கு அதிக அளவில் இங்கிருந்து தேங்காய் ஏற்றுமதியாவதால் சேலம் சந்தைகளுக்கு தேங்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயா்ந்துள்ளது. இனி வரும் நாள்களிலும் இதே விலை நீடிக்கும் என்றாா்.
ஏற்கனவே வெங்காயம் விலை ஏறி, இறங்கி, ஏறி பிறகு அப்படியே ஒரு கிலோ வெங்காயம் என்றால் அது ரூ.50 என்று நிர்ணயிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது தேங்காய் விலை கிலோ ரூ.100 என்ற அளவுக்கு நின்றுவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், அதையும் தாண்டி அதிகரிக்குமோ என்ற அச்சமும் இருக்கத்தான் செய்கிறது.