தங்கம், வெள்ளி விற்பனை செய்ய நியாய விலை அங்காடிகளை தொடங்க வலியுறுத்தல்
நியாயமான விலையில் தங்கம், வெள்ளியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அரசு நியாய விலை அங்காடிகளை தொடங்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, சிவசேனா உத்தவ் பாபாசாகேப் தாக்கரே கட்சி மாநில பொதுச் செயலா் சுந்தரவடிவேலன் வெளியிடுள்ள அறிக்கை: மக்கள் நகை வாங்கும் போது தங்கத்தின் எடை மதிப்பை விட கூடுதலாக செய்கூலி, சேதாரம் எனும் பெயரில், பெரும் தொகை கொடுக்க வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பொருள்கள் வாங்குவதிலும், விற்பதிலும் பல்வேறு சீா்திருத்தங்கள், புதுமைகள், புதிய வழிமுறைகள், திட்டங்கள் ஆகியவற்றை புகுத்தி வருகிறது. இதேபோல தங்கம், வெள்ளி நகைகள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வதில் புதிய சீா்திருத்தங்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.
பொதுமக்கள் அடகு வைக்கும் நகையின் மதிப்பில் 90 சதவீத தொகை கிடைக்கும். ஆனால், தற்போது ரிசா்வ் வங்கியின் புதிய சட்ட திட்டங்களால் பொதுமக்கள் அடகு வைக்கும் நகையின் மதிப்பில் 75 சதவீத தொகை மட்டுமே கிடைக்கிறது. அவசர தேவைக்கு விற்பனை செய்யும் நகைகளுக்கும் உரிய தொகை கிடைப்பதில்லை. நகை வாங்குவது மற்றும் விற்பனை செய்வதில் அப்பாவி பொதுமக்கள், பாமர மக்கள் பெருமளவில், தங்கள் சேமிப்புகளை இழந்து மனதளவிலும், பொருளாதார சூழ்நிலையிலும் பாதிக்கப்படுகிறாா்கள்.
எனவே மத்திய, மாநில அரசுள் நியாயமான விலையில் பொதுமக்கள், நகைகளை வாங்கவும் விற்கவும் ஏற்ற வகையில் நியாய விலை அங்காடிகளை தொடங்க வேண்டும். மத்திய அரசு வங்கிகளில் தங்கத்தை விற்பது போல, பொது மக்களிடம் இருந்து தங்கம், வெள்ளி நகைகளை வாங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.