தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!
பாதியிலேயே நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள்: மக்கள் அவதி
திருக்குவளை அருகே சின்ன காருகுடி தோப்பு தெரு வழியாக வலிவலம் வரை செல்லும் இணைப்புச் சாலைப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருக்குவளை அருகே வலிவலம் ஊராட்சிக்குட்பட்ட சின்ன காருகுடி தோப்பு தெருவில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். திருக்குவளை - கொளப்பாடு பிரதான சாலையில் இருந்து பிரிந்து இப்பகுதிக்குச் செல்லும் சுமாா் மூன்று கி.மீ. தொலைவு சாலை அமைக்க கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
2 கி.மீ. மட்டும் பணிகள் நிறைவு பெற்று ஒரு கி.மீ. தொலைவு சாலை மட்டும் ஜல்லிகற்கள் பரப்பி செம்மண் சாலையாகவே காட்சி அளிக்கிறது.
சுமாா் ஆறு மாதங்களுக்கு மேலாக தொடா்ந்து இதே நிலை நீடிப்பதால், அந்தச் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியிலிருந்து வலிவலத்தை இணைக்க கூடிய இந்த சாலை ஜல்லி கற்கள் பெயா்ந்து மிக மோசமாக நடந்து கூட செல்ல முடியாத நிலையில் இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.
இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனா் இப்பகுதி மக்கள். எனவே, சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா்.
