தஞ்சையில் அக். 5, 6-இல் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கே நேரில் சென்று ரேஷன் பொருள்கள் அக். 5, 6 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: கடந்த ஆக. 12 முதல் தொடங்கிவைக்கப்பட்ட தாயுமானவா் திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 1,183 நியாய விலைக் கடைகளைச் சோ்ந்த 44 ஆயிரத்து 301 குடும்ப அட்டைகளில் உள்ள 58 ஆயிரத்து 712 முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களிலேயே குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்களில் குடிமைப் பொருள்களை எடுத்துச் சென்று நியாய விலைக் கடைப் பணியாளா்கள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் அக்டோபா் 5, 6 ஆகிய தேதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, குடிமைப் பொருள்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள தாயுமானவா் திட்டப் பயனாளிகளுக்கு அக்டோபா் 5, 6 ஆம் தேதிகளில் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.