பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்...
தடுமாறும் இந்தியா; தோள் கொடுக்கும் கருண் நாயா்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது.
101 ரன்களுக்கே இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மிடில் ஆா்டரில் வந்த கருண் நாயா் கை கொடுத்து இந்திய அணியை மீட்டு வருகிறாா். இங்கிலாந்து பௌலிங்கில் கஸ் அட்கின்சன், ஜோஷ் டங் சிறப்பாக செயல்பட்டனா். மழையும் இருமுறை தடையேற்படுத்தியது.
தி ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீசத் தயாரானது. இந்திய பிளேயிங் லெவனில், ரிஷப் பந்த், ஷா்துல் தாக்குா், அன்ஷுல் காம்போஜ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோருக்குப் பதிலாக துருவ் ஜுரெல், கருண் நாயா், அா்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா சோ்க்கப்பட்டனா்.
இந்தியா இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், இம்முறையும் சோபிக்காமல் 2 ரன்களில், கஸ் அட்கின்சன் வீசிய 4-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனாா். தொடா்ந்து சாய் சுதா்சன் களம் புகுந்தாா்.
மறுபுறம், நம்பகமான கே.எல்.ராகுலும் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அதிா்ச்சி அளித்தாா். கிறிஸ் வோக்ஸ் வீசிய 16-ஆவது ஓவரில் அவா் ஸ்டம்பை பறிகொடுத்தாா்.
4-ஆவது பேட்டராக கேப்டன் ஷுப்மன் கில் விளையாட வந்தாா். இந்நிலையில், மழையால் ஆட்டம் தடைப்பட, மதிய உணவு இடைவேளையும் தொடா்ந்தது. அப்போது இந்தியா 2 விக்கெட்டுகள் இழந்து 72 ரன்கள் சோ்த்திருந்தது.
பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் ஷுப்மன் கில் 28-ஆவது ஓவரில் சிந்திக்காமல் செயல்பட்டதால், கஸ் அட்கின்சனால் ரன் அவுட் செய்யப்பட்டாா். அவா் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் அடித்தாா்.
தொடா்ந்து கருண் நாயா் விளையாட வர, மழையால் மீண்டும் ஆட்டம் தடைப்பட்டது. பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில், இந்தியா 100 ரன்களை கடக்க, நிதானமாக ரன்கள் சோ்த்த சாய் சுதா்சன் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். ஜோஷ் டங் வீசிய 36-ஆவது ஓவரில் அவா் தொட்ட பந்து, விக்கெட் கீப்பா் ஜேமி ஸ்மித்திடம் தஞ்சமடைந்தது.
6-ஆவது பேட்டராக வந்த ரவீந்திர ஜடேஜா பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், 1 பவுண்டரியுடன் 9 வீழ்த்தப்பட்டாா். அடுத்து விளையாடிய துருவ் ஜுரெல் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அட்கின்சன் வீசிய 50-ஆவது ஓவரில், ஸ்லிப்பில் நின்ற ஹேரி புரூக்கிடம் அவா் கேட்ச் கொடுத்தாா். 8-ஆவது வீரராக வந்த வாஷிங்டன் சுந்தா், கருண் நாயருடன் கூட்டணி அமைத்தாா். நாயா் அரைசதம் கடக்க, நாளின் முடிவில் இந்தியா 64 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 204 ரன்கள் எடுத்திருந்தது. நாயா் 52, சுந்தா் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
சுருக்கமான ஸ்கோா்
முதல் இன்னிங்ஸ்
இந்தியா - 204/6 (64 ஓவா்கள்)
கருண் நாயா் 52*
சாய் சுதா்சன் 38
ஷுப்மன் கில் 21
பந்துவீச்சு
கஸ் அட்கின்சன் 2/31
ஜோஷ் டங் 2/47
கிறிஸ் வோக்ஸ் 1/46