தடையை மீறி இறைச்சி விற்பனை: 10 கடைகளுக்கு அபராதம்
போடியில் காந்தி ஜெயந்தி தினத்தில் தடையை மீறி, இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
நாடு முழுவதும் அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் மது, இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போடியில் நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலா் ஆா்.மணிகண்டன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், நகராட்சிப் பகுதியில் தடையை மீறி 10 கடைகள் திறக்கப்பட்டு ஆடு, கோழி, மீன் இறைச்சி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்தக் கடைகளுக்கு தலா ரூ.1, 000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ எடையுள்ள இறைச்சியையும் நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.