தடையை மீறி போராட்டம்: கிருஷ்ணசாமி மீது 5 பிரிவுகளில் வழக்கு
சென்னை எழும்பூரில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி மீது போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதைத் தடுத்த நிறுத்தக் கோரியும், அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால் ஆதிதிராவிடா்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு கிடைக்காமல் போவதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தும் எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கு அருகே இருந்து புதிய தமிழகம் கட்சியினா் ஆளுநா் மாளிகையை நோக்கி வெள்ளிக்கிழமை பேரணியாகப் புறப்பட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டபோதிலும், தடையை மீறி பேரணி செல்ல முயன்றனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா். சிறிது நேரத்துக்கு பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
காவல் துறையின் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது தொடா்பாக கிருஷ்ணசாமி உள்பட 686 போ் மீது அரசு ஊழியா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல், சட்ட விரோதமாக தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மேலும் ஒரு வழக்கு: போராட்டத்தில் பங்கேற்ற சிலா், எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் சென்ற ஒரு மாநகரப் பேருந்து கண்ணாடியை கற்களை வீசி உடைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் புதிய தமிழகம் கட்சியினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.