தண்டவாளத்தில் கல்: ரயிலை கவிழ்க்க சதியா?
வடகோவை - பீளமேடு இடையே ஆவாரம்பாளையம் மேம்பாலத்தின் அடியில் தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைக்கப்பட்டிருந்தது. ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து கோவை வழியாக சென்னைக்கு (ரயில் எண்: 12696) விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டது. இந்த ரயில் திங்கள்கிழமை அதிகாலை 2.10 மணி அளவில் வடகோவை- பீளமேடு இடையே ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழே வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைக்கப்பட்டு இருந்தது.
இதைப் பாா்த்த ரயில் ஓட்டுநா் செய்வதறியாது திகைத்தாா். ஆனால், அந்த ரயில் கல் மீது ஏறியது. இதில் அந்த கல் உடைந்து சிதறியது. அப்போது, பயங்கரமான சப்தம் கேட்டதால், தூக்கத்தில் இருந்த பயணிகளும் திடுக்கிட்டு கண் விழித்தனா். ஆனாலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் ரயில் தொடா்ந்து சென்றது.
இதுகுறித்து ரயிலில் இருந்த லோகோ பைலட் அளித்த தகவலின் அடிப்படையில், கோவை ரயில்வே காவல் ஆய்வாளா் மகேந்திரகுமாா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனா். மோப்ப நாய் அழைத்து வரப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் மாா்க்கெட் வரை ஓடி நின்றது.
கற்கள் வைக்கப்பட்டதில் சதித் திட்டம் ஏதும் உள்ளதா என அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.