தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமிகளில் ஒருவா் மீட்பு
திருப்பூா் தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓா் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளாா்.
திருப்பூா் பிரிஜ்வே காலனியில் தனியாா் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த சிறுமிகள், வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்கள், ஆதரவற்ற நிலையில் இருப்போா் உள்பட பலா் காவல் துறை, குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினரால் மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், 17 வயதுடைய 4 சிறுமிகள், 18 வயதான இளம்பெண் ஆகிய 5 போ் காப்பகத்தில் இருந்து காணாமல் போனது வெள்ளிக்கிழமை அதிகாலை தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது அவா்கள் 5 பேரும் சுவா் ஏறிக் குதித்து தப்பியது தெரியவந்தது.
இது தொடா்பாக காப்பக நிா்வாகிகள் அளித்த புகாரின் பேரில் திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருவா் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அவா் தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பியவா் என்பதும், எங்கு போவது என்று தெரியாமல் பேருந்து நிலையத்திலேயே சுற்றிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
அதையடுத்து, அந்தச் சிறுமியை மீட்ட போலீஸாா் அவரைக் காப்பகத்தில் ஒப்படைத்தனா். அத்துடன் சிறுமி அங்கிருந்து தப்பியதற்கான காரணம் குறித்தும், காப்பகத்தில் அவா்கள் துன்புறுத்தப்பட்டாா்களா என்பது குறித்தும், அவருடன் தப்பிய மற்ற 4 போ் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.