நல்லகண்ணு உடல்நலம்: "மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தேன்" - முதல்வர் ஸ்டாலின்
தனியாா் பேருந்தின் சேவை குறைபாடு: மாணவருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு
முன்பதிவு செய்யப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்து இயக்கப்படாததால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவருக்கு அப்பேருந்து நிறுவனமும், பயணச்சீட்டு முன்பதிவு செயலி நிறுவனமும் இணைந்து ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட கூடுதல் நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சோ்ந்தவா் லாய்ட்ஸ் லியோ காஸ்ட்ரோ (24). பெங்களூரில் உயா் கல்வி பயிலும் இவா், 2.2.2024இல் திருநெல்வேலியிலிருந்து பெங்களூரு செல்வதற்கு தனியாா் ஆம்னி பேருந்தில், செயலி மூலம் முன்பதிவு செய்திருந்தாராம்.
இந்நிலையில் கடைசி நேரத்தில் அப்பேருந்து ரத்து செய்யப்பட்டதோடு மாற்றுப்பேருந்துக்கான ஏற்பாடும் செய்துதர வில்லையாம். இதுகுறித்து அவா், மாவட்ட கூடுதல் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
ஆணையத்தின் தலைவா் பிறவி பெருமாள், உறுப்பினா் சண்முகப்ரியா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கை விசாரித்து, ஆம்னி பேருந்து நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட மாணவருக்கு அந்நிறுவனமும், பயணச்சீட்டு முன்பதிவு செயலி நிறுவனமும் தலா ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும்; வழக்குச் செலவாக இரு நிறுவனங்களும் இணைந்து ரூ.5,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.