தமிழக பல்கலைக்கழகங்களுக்கு 10 ஆண்டுகளாக நிதி வழங்காத மத்திய அரசு: பேரவைத் தலைவா் மு. அப்பாவு குற்றச்சாட்டு
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதை தகவலறியும் உரிமைச் சட்டம் மூலமாக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிந்து கொள்ளலாம். பல்கலைக்கழக மானியக் குழு கூறும் பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை.
ஆளுநருக்கு எதிராகவோ, வேந்தா்களுக்கு எதிராகவோ நிலைப்பாடு எடுக்கவேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. தமிழ் பல்கலைக்கழகத்துக்கு கடந்த 4 ஆண்டுகளாக பல்கலைக்கழக மானியக் குழு எந்த நிதியையும் வழங்கவில்லை. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக தமிழக பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசின் நிதி வழங்கப்படவில்லை.
இதனால், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் எந்த அளவுக்கு நிதி நெருக்கடியில் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவா். ராதாபுரம் தொகுதியில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் மாணவா்கள் படிக்கும் 40 பள்ளிகள் இருக்கின்றன. அந்தப் பள்ளிகளை அருகில் உள்ள பெரிய பள்ளிகளில் இணைக்கலாம் என முதல்வரிடம் பரிந்துரைத்தேன். ஆனால் பள்ளிகளை மூடியதாக குற்றச்சாட்டுகள் எழும் என்ற தயக்கத்தில் முதல்வா் அதனை வேண்டாம் என்று கூறிவிட்டாா்.
போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளது குறித்து கேட்கிறீாா்கள். இதற்கு முந்தைய ஆட்சியில் எந்த ஒரு போராட்டம் என்றாலும் நீதிமன்றத்தில்தான் அனுமதி பெற வேண்டும். ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் அனைத்துப் போராட்டங்களுக்கும் முறையாக அனுமதி வழங்கப்படுகிறது. மதியம் நடைபெறும் போராட்டத்திற்கு காலையில் அனுமதி கேட்டால் தான் வழங்கப்படுவதில்லை என்றாா் அவா்.