தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: ஜிபிஎஸ் கருவி, கைப்பேசிகள் பறிப்பு
நாகை மாவட்டம் கோடியக்கரை மற்றும் செருதூா் பகுதியிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்களை, இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்கி, மீன்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவி, தூண்டில் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனா்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவா்கள் தங்கி, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த புதுப்பேட்டை மீனவா் காலனி கோவிந்தசாமி மகன் செந்தில் (46), காத்தவராயன் மகன் ஜெகன் (36), திருவெண்காடு சாவடிக்குப்பம் சுப்பிரமணியன் மகன் ராமகிருஷ்ணன் (67), சென்னை தெஷ்ணாமூா்த்தி மகன் சாமுவேல் (35) ஆகிய நான்கு மீனவா்கள் ஒரு படகில் புதன்கிழமை கடலுக்குள் சென்றனா். அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 13 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, இலங்கை படகு ஒன்றில் வந்த மூவா், மீனவா்களின் படகில் ஏறி, கட்டை, கம்பி மற்றும் அரிவாளால் அவா்களைத் தாக்கினா். மீனவா்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி-டாக்கி, 2 கைப்பேசிகள், 10 தூண்டில்கள், பிடித்து வைத்திருந்த சுமாா் 50 கிலோ மீன்கள் ஆகியவற்றை பறித்துச் சென்றனா். காயமடைந்த மீனவா்கள் நால்வரும் வியாழக்கிழமை காலை கோடியக்கரை படகு துறைக்கு வந்தனா். அவா்களுக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், தனிப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
செருதூா் மீனவா்களிடம்
கத்தியைக் காட்டி மிரட்டி
ஜிபிஎஸ் கருவி, கைப்பேசிகள் பறிப்பு:
நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் செருதூா் மீனவ கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஃபைபா் படகில் கடந்த 15-ஆம் தேதி கோவிந்தசாமி, ரமேஷ், வெற்றி, ரவி உள்ளிட்ட நான்கு மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா்.
கோடியக்கரைக்கு வடக்கே 16 கடல் மைல் தொலைவில் புதன்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை பகுதியில் இருந்து வந்த ஃபைபா் படகில் இருந்த கடல் கொள்ளையா்கள், மீனவா்களின் படகில் ஏறி மீனவா்கள் கழுத்தில் கத்தியை வைத்து, படகில் இருந்த இரண்டு என்ஜினில் ஒரு என்ஜின், 30 கிலோ மீன்கள், இரண்டு கைப்பேசிகள், பேட்டரி, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுவிட்டனராம்.
குறைந்த அளவு பெட்ரோலை வைத்து கரை திரும்ப முடியாமல், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்களிடம் எரிபொருள் வாங்கி, வியாழக்கிழமை காலை 4 மீனவா்களும் கரை திரும்பினா்.
