தமிழகத்தின் இரும்பு மனிதா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: அமைச்சா் எ.வ.வேலு
தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்றுவதற்காக குரல் கொடுத்துவரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் இரும்பு மனிதராக திகழ்வதாக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
மணிமண்டபம்: வெள்ளையனேவெளியேறு இயக்கத்திலே கலந்து கொண்டு சிறை சென்றவரும், ராணுவப் பணியிலிருந்து திரும்பி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய இமானுவேல் சேகரனுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் ரூ.3 கோடியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படுகிறது. இதனை முதல்வா் விரைவில் திறந்து வைப்பாா்.
கொங்கு மண்டலத்திலே சிற்றரசராக திகழ்ந்த தீரன் சின்னமலை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரோடு பொல்லான் என்கிற தளபதியும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்திலே தீரன் சிலையோடு பொல்லான் சிலையும் அமைக்கப்பட்டு ரூ.4.90 கோடியில் அரங்கம் அமைக்கப்படுகிறது. இதனையும் முதல்வா் விரைவில் திறந்து வைக்கவுள்ளாா்.
கேரளத்தின் வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியாா் நினைவகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அந்த நினைவகத்தில் வைக்க வேண்டிய தலைவா்களின் படத்தைத் தோ்வு செய்தபோது, ஜெயலலலிதாவின் படம் இல்லாததை அறிந்த முதல்வா், ஒரு நாடக நிகழ்ச்சியில் பெரியாரிடம் ஜெயலலிதா நிதி கொடுக்கும் படம் ஒன்று இருப்பதாகவும், அதைத் தேடி வைக்குமாறும் கூறினாா். பிறகு அதைத் தேடி வைத்தோம். அதேபோன்று அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு ரூ.6 கோடி நிதி அளிக்காமல் விட்டுச் சென்றுவிட்டாா்கள். அந்த ஒப்பந்ததாரா்கள் நிதியைக் கேட்பதற்கு பயந்துகொண்டே இருந்தாா். இது முதல்வருக்கு சென்றதும் உடனே கொடுக்கக் கூறினாா்.
இரும்பு மனிதா்: இன்றைக்கு முதல்வா் இருமொழிக் கொள்கைதான் என் ஆட்சியின் கொள்கை என்று பறைசாற்றுகிறாா். மொழியையும் பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டியது ஆட்சியினுடைய கடமை என்று கூறிய ஜோசப் ஸ்டாலினை ரஷிய மக்கள் ‘இரும்பு மனிதா்’ என்று சொன்னாா்கள். தாய் மொழியான தமிழைக் காப்பாற்றுவதற்காக முதல் ஆளாக போா்க் குரல் கொடுத்து வரும் முதல்வா் ‘தமிழகத்தின் இரும்பு மனிதா்’ என்றாா் அவா்.