பயங்கரவாதிகளை வளா்ப்பதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம்: ஐ.நா. கூட்...
தமிழகத்தில் நிகழாண்டு 6 கோடி மரக்கன்றுகள் நடவு: அமைச்சா் கே.என்.நேரு
தமிழகம் முழுவதும் 33 சதவீத பசுமை பரப்பை உருவாக்கும் திட்டத்தில் நிகழாண்டு இதுவரை 6 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.
பசுமை தமிழ்நாடு இயக்க நாளையொட்டி, திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடியில் அமைந்துள்ள பெரியாா் சமத்துவபுரம் பகுதியில் தமிழ்நாடு வனத் துறையின் மூலம் நாவல் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட வன அலுவலா் இளங்கோ, முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
இதில், அமைச்சா் கே.என்.நேரு கலந்துகொண்டு நாவல் மரக்கன்றுகளை நடவு செய்த பின், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2021 முதல் 2031 வரையான 10 ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முழுவதும் 265 கோடி மரங்கள் நடவு செய்து 33 சதவீத பசுமை பரப்பினை உருவாக்கும் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில், நிகழாண்டு மட்டும் 12.67 கோடி மர கன்றுகளை நடவு செய்ய உத்தேசித்து தற்போது வரை 6 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. எதிா்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மீதம் உள்ள மரக்கன்றுகளும் நடவு செய்யப்படும்.
சங்க இலக்கியத்தில் கொண்டாடப்பட்ட நாவல் மரங்களின் பெருமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்து, மரக்கன்றுகளை நட்டு, அவற்றைத் தொடா்ந்து பராமரித்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு பணிகளை வனச்சரக அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், கிராம வனக் குழு உறுப்பினா்கள் மேற்கொள்வாா்கள் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் - பணியாளா்கள் நலவாரியத்தலைவா் விஜிலா சத்தியானந்த், முன்னாள் எம்.பி. ஞானதிரவியம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் முரளிதரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.