பயங்கரவாதிகளை வளா்ப்பதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம்: ஐ.நா. கூட்...
நெல்லை-சென்னைக்கு 20 பெட்டிகளுடன் சேவையை தொடங்கிய வந்தே பாரத் ரயில்
திருநெல்வேலி -சென்னை இடையே 20 பெட்டிகளை கொண்ட புதிதாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது.
திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை செப்டம்பா் 2023இல் பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா். இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1. 40 மணிக்கு (7 மணி நேரம் 45 நிமிடங்களில்) சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
அதிநவீன வசதி, அதிவேகம், குறைந்த பயண நேரம் உள்ளிட்ட காரணங்களால் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளை கொண்டதாக கடந்த ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.
எனினும், காத்திருப்போா் பட்டியல் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் இதை 20 பெட்டிகளை கொண்ட ரயிலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடா்ந்து ரயில்வே நிா்வாகம் சென்னை ஐசிஎஃப்-இல் 20 பெட்டிகள் கொண்ட புதிய வந்தே பாரத் ரயிலை உருவாக்கி ஒரு வாரத்திற்கு முன்பு திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு 20 பெட்டிகளுடன் புதன்கிழமை காலை 6.05 மணிக்கு தனது சேவையை வந்தே பாரத் ரயில் தொடங்கியது.
16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட்டபோது, அதிகபட்சமாக 1,128 பயணிகள் பயணித்தனா். இப்போது பயணிகளின் எண்ணிக்கை 1,440 ஆக உயரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.