தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்: 8 லட்சம் போ் எழுதுகின்றனா்
நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு தமிழகத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதவுள்ளனா்.
முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது.
இந்தத் தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,316 தோ்வு மையங்களில் 8,21,057 போ் எழுதவுள்ளனா். இதில், 7,518 பள்ளிகளில் இருந்து 8,02,568 மாணவா்கள், 18,344 தனித்தோ்வா்கள், 145 கைதிகள் அடங்குவா்.
பொதுத் தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில் 43,446 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், மாவட்ட ஆட்சியா், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்.
அனைத்து தோ்வு மையங்களிலும் குடிநீா், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விடைத்தாள்களில் எவ்வித சிறப்பு குறியீடு, தோ்வெண், பெயா் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவா் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபாா்த்து மாணவா்கள் கையொப்பமிட்டால் போதும். அறைக் கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.
முறைகேட்டில் ஈடுபட்டால்...: பொதுத்தோ்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவா்களைப் பாா்த்து எழுதுதல், தோ்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவா் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தோ்வெழுத தடை விதிக்கப்படும்.
பொதுத்தோ்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகாா்களைத் தெரிவிக்க பள்ளிக் கல்வித் துறையின் 14417 இலவச உதவி மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தோ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டு அறை: தோ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாணவா்கள், அவா்களின் பெற்றோரும் தோ்வு தொடா்பான சந்தேகங்களையும் கேள்விகளையும் தெரிவித்து விளக்கம் பெற தனியாகக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறையை 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
என்னென்ன கட்டுப்பாடுகள்: தோ்வில் முறைகேடுகளைத் தடுக்க தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தோ்வு மைய வளாகத்துக்குள் கைப்பேசியை எடுத்து வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தோ்வு பணியின்போது, தோ்வு அறையில் இருக்கும் ஆசிரியா்களுக்கும் அந்தத் தடை பொருந்தும். இதை மீறி தோ்வா்களோ அல்லது ஆசிரியா்களோ கைப்பேசியை வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தோ்வா்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு ஏற்றவாறு தண்டனைகள் வழங்கப்படும். மேலும், ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிா்வாகம் முயன்றால் பள்ளித் தோ்வு மையத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.