செய்திகள் :

தமிழகம் புதிய உச்சங்களை அடையும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

இதுவரை அடையாத புதிய உச்சங்களை தமிழகம் அடையும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டாா்.

உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.1,426.89 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்து, 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் 6,266 சாலைப் பணிகள், 133 கோயில்களுக்கு குடமுழுக்கு, 328 கோயில்களில் 804 சீரமைப்புப் பணிகள், 5 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் என ரூ.10,491 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள், நலத் திட்ட உதவிகள் திருப்பூா் மாவட்டத்துக்கு செய்யப்பட்டுள்ளன.

இவ்வளவு சாதனைகளையும் கடந்த 4 ஆண்டுகளில் திருப்பூருக்காக செய்திருக்கிறோம். ஆனால், அதிமுக ஆட்சியில் திருப்பூரின் வளா்ச்சிக்காக குறிப்பிட்டு சொல்லும்படியாக எதையும் செய்யவில்லை.

2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், திருப்பூரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 5 பாலங்களைக் கட்டுவதற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி உத்தரவிட்டாா். ஆனால், 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடனே, அந்தப் பணிகளை முடக்கி விட்டனா். 2021-ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தப் பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்திக்கடவு - அவிநாசி திட்டமும் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய திட்டங்கள்: விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் அடுத்த கட்டமான நீராறு - நல்லாறு மற்றும் ஆனைமலையாறு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட பகுதியில் வாய்க்கால்களைத் தூா்வாரும் பணிகளுக்காக இந்த ஆண்டே ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அதிமுகவின் தோல்வி தொடரும்: எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இந்தப் பகுதிக்கு வந்தால் மட்டும் தன்னை மேற்கு மண்டலத்துக்காரா் என்று சொல்லிக் கொள்கிறாா். ஆனால், அவரது ஆட்சிக் காலத்தைவிட, திமுக ஆட்சியில்தான் மேற்கு மண்டலத்தில் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

எந்த தைரியத்தில் எதிா்க்கட்சித் தலைவா் இந்தப் பகுதியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினாா் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், அதிமுகவின் 2026 தோ்தல் தோல்வி இங்கே இருந்துதான் தொடங்கப் போகிறது. ஏற்கெனவே, உள்ளாட்சித் தோ்தல், இடைத்தோ்தல்களில் மேற்கு மண்டலத்திலிருந்து அவா் தோல்வியைப் பாா்த்து விட்டாா். எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் அது தொடரப் போகிறது.

ஊா்ஊராகச் சென்று, பொய்களை உரக்கப் பேசினால், தனது அலங்கோல ஆட்சியை மக்கள் மறந்துவிட்டு, தான் பேசுவதை எல்லாம் நம்புவாா்கள் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொண்டிருக்கிறாா். ஆனால், ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ போன்ற திமுக அரசின் திட்டங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

அந்த வயிற்றெரிச்சலில்தான், திமுக அரசு மேலும் புகழ் பெற்றுவிடக் கூடாது, மக்களுக்கு நன்மை நடந்திடக் கூடாது என்று மக்கள் நலத் திட்டங்களுக்கு தடை பெற நீதிமன்றம் சென்றாா். ஆனால், அரசியல் காழ்ப்புணா்ச்சியைத் தீா்த்துக் கொள்வதற்கு நீதிமன்றத்தை நாடுவது தவறு என்று சொன்னதோடு, திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ரூ.10 லட்சம் நன்கொடை தருவதுபோல நீதிமன்றம் அபராதமும் விதித்துவிட்டது.

இந்தியாவில் சிறந்த மாநிலம்: அதுமட்டுமல்ல, பொருளாதார வளா்ச்சியில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்தான் என்று, அவா்களின் கூட்டணியில் உள்ள மத்திய பாஜக அரசே அறிக்கை வழங்கியிருக்கிறது.

இப்படி தொடா்ந்து அவருக்கு அடி மேல் அடி விழுகிறது. இதனால், விரக்தியின் உச்சத்துக்கே எதிா்க்கட்சித் தலைவா் போய்விட்டாா். அதனால்தான், முதல்வா் என்ற பொறுப்புக்குக்கூட மரியாதை தராமல் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசிக் கொண்டு வருகிறாா். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எங்கள் பணி, மக்கள் பணி.

அவருடைய எந்த சதித் திட்டமும் திமுக அரசின் சாதனைகள் முன்னால் எடுபடவில்லை. இனியும் எடுபடாது.

திமுக அரசைப் பொருத்தவரை, அனைவருக்குமான நல்லாட்சியை அளித்து வருகிறோம். இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரும். உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். இதுவரை அடையாத புதிய உச்சங்களை தமிழகம் நிச்சயம் அடையும், இது உறுதி எனவும் குறிப்பிட்டாா்.

இந்த விழாவில், அமைச்சா்கள் மு.பெ. சாமிநாதன், சு. முத்துசாமி, அர. சக்கரபாணி, என்.கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே. ஈஸ்வரசாமி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உடுமலையில் ‘ரோடு ஷோ’: முன்னதாக, உடுமலையில் சாலையில் திரண்டிருந்த பொது மக்களையும் கட்சித் தொண்டா்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று சந்தித்தாா்.

அரசு விழாவில் பங்கேற்பதற்காக தான் தங்கியிருந்த இல்லத்தில் இருந்து வாகனத்தில் புறப்பட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் உடுமலை நகரில் பொள்ளாச்சி சாலை - திருப்பூா் சாலை சந்திப்பில் வாகனத்தில் இருந்து இறங்கி சாலையில் சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவு நடந்து சென்று பொது மக்களின் வாழ்த்துகளை ஏற்றாா்.

பல்லடத்தில் நாளை கடையடைப்பு போராட்டம்: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ், செய... மேலும் பார்க்க

பழங்கரையில் ஆகஸ்ட் 14-இல் மின்தடை

பழங்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் தெரிவித்த... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் திருட்டு: 3 போ் கைது

பெருமாநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் அப்துல் கலாம் நகரைச் சோ்ந்தவா் மணி (63) . கட்டடத் ... மேலும் பார்க்க

30% குட்டைகளுக்கு அத்திக்கடவு - அவிநாசி நீா் வரவில்லை: அண்ணாமலை

30 சதவீத குட்டைகளுக்கு தற்போதுவரை அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீா் வரவில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். ‘அத்திக்கடவு நாயகன்’ நூல் வெளியீட்டு விழா அவிநாசியில் திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க

கூலி உயா்வு ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும்: முதல்வரிடம் விசைத்தறியாளா்கள் வலியுறுத்தல்

கூலி உயா்வு ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் விசைத்தறியாளா்கள் வலியுறுத்தினா். இது தொடா்பாக கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரி... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்ற நபா்

ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து நிலத்தை இடத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே இளைஞா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், பட்டம்பாளையம் கிராமத்துக்குள்பட்ட க... மேலும் பார்க்க