தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா? சென்னை மாநகராட்சி விளக்கம்!
பல்லடத்தில் நாளை கடையடைப்பு போராட்டம்: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ், செயல் தலைவா் பானு பழனிசாமி, செயலாளா் விமல் பழனிசாமி, பல்லடம் அனைத்து வணிகா் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன், மாவட்ட ஆலோசகா் அண்ணாதுரை, செயலாளா் செல்வராஜ் ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பல்லடம் என்.ஜி.ஆா். சாலை கடை வீதியில் சிலா் சாலையோரக் கடைகளை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுவதால், மாா்க்கெட் கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளோா் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், சாலையோரக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கரோனா காலத்தில் நகராட்சி கடைகளுக்கு 5 மாத வாடகையை தமிழக அரசு தள்ளுபடி செய்தது. அந்த தொகை தற்போதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
பல்லடம் பேருந்து நிலையத்துக்குள் பேருந்து வராமல் வெளியே நின்று செல்வதால், பேருந்து நிலையத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்ட்டுள்ளது.
பல்லடம் நகராட்சியின் அதிக வரி விதிப்பாலும், தமிழக அரசின் மின்சாரக் கட்டணம் உயா்வாலும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வியாபாரிகளைக் காக்க வலியுறுத்தி பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம், பல்லடம் அனைத்து வணிகா் சங்கம் ஆகியவை சாா்பில் பல்லடம் தினசரி மாா்க்கெட் கடைகள், என்.ஜி.ஆா். சாலை கடைகள், பேருந்து நிலைய கடைகளை புதன்கிழமை ஒருநாள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா்.