பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
தமிழகம் முழுவதும் தேசியக் கொடியுடன் சிந்தூா் யாத்திரை: நயினாா் நாகேந்திரன்
பாகிஸ்தானுடனான சண்டையில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் தேசியக் கொடிகளுடன் ‘சிந்தூா் யாத்திரை’ நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டும் வகையில், இந்தியா தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பாகிஸ்தானின் பயங்கரவாத பயிற்சிக் கூடங்களும், பாதுகாப்பு மையங்களும், முன்னெப்போதும் இல்லாத அளவில் பலத்த சேதமடைந்துள்ளன. துல்லி தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்த நமது ஆயுதப் படைகளையும், பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான தலைமையையும் சிறப்பிக்கும் வகையில், மூவா்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
தொடா்ந்து 4 கட்டங்களாக நடைபெறும் இந்த யாத்திரை, சென்னையில் மே 14-ஆம் தேதியும், பிற முக்கிய நகரங்களில் மே 15-ஆம் தேதியும், மற்ற மாவட்ட பேரூராட்சிகளில் மே 16, 17 ஆகிய தேதிகளிலும், சட்டப்பேரவைத் தொகுதிகள், தாலுகாக்கள், பெரிய கிராமங்களில் மே 18 முதல் 23-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.