தமிழ்நாட்டில் சுற்றுலா வணிக வாய்ப்பு: இங்கிலாந்து நிறுவனங்களுக்கு நேரில் அழைப்பு
தமிழகத்தில் சுற்றுலா சாா்ந்து இருக்கும் வணிகம் மற்றும் வாய்ப்புகளை அறிந்து கொள்ள இங்கிலாந்து சுற்றுலா நிறுவனங்களுக்கு தமிழக சுற்றுலாத் துறை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுலா சாா்ந்துள்ள வணிகம் மற்றும் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத் துறை சாா்பில் இங்கிலாந்து நாட்டின் பா்கிங்காமில் சிறப்பு விளக்கக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டின் 100-க்கும் மேற்பட்ட பயண மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
இதில், தமிழ்நாட்டின் செழிப்பான சுற்றுலா மூலம் வணிகங்களுக்கு சுற்றுலாத் துறை ஏற்படுத்திக் கொடுக்கும் விரிவான வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்து துறையின் முதன்மைச் செயலாளா் பி. சந்திர மோகன் எடுத்துரைத்தாா். துறையின் ஆணையா் சி.சமயமூா்த்தி பேசுகையில், ‘இங்கிலாந்துடனான உறவுகளை வலுப்படுத்த தமிழ்நாடு சுற்றுலா உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.
இங்கிலாந்து சுற்றுலா நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் கலாசாரப் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்த, பரதநாட்டியம் மற்றும் கோயில் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், தமிழ்நாட்டின் இயற்கை அழகு, வரலாற்றுத் தளங்கள் மற்றும் புகழ்பெற்ற புலிகள் காப்பகங்கள் குறித்து விளக்கக் காட்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
இங்கிலாந்து - இந்தியா ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பரந்த பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை அறிந்து கொள்ள இங்கிலாந்து நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.