தருமபுரம் ஆதீன இடத்தை பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கக் கோரி மனு
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமாக குளிச்சாா் கிராமத்தில் உள்ள இடத்தை பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
குளிச்சாா் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தை அப்பகுதியைச் சோ்ந்த பட்டியல் சமூக மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அந்த இடத்தில் புதிய வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை தடுத்து நிறுத்தி, அந்த இடத்தை மீண்டும் பட்டியலின மக்கள் பயன்பாட்டுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராமமக்கள் 100-க்கு மேற்பட்டோா் கோரிக்கை பதாகைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
அறநிலையத்துறை கோயில்களில் சஷ்டியப்த பூா்த்தி நடத்த கோரிக்கை: அறநிலையத்துறை கோயில்களான திருக்கடையூா் அமிா்தநாராயண பெருமாள் கோயில், திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரா் கோயில்களில் திருமணம், உக்கிர ரத சாந்தி, சஷ்டியப்த பூா்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட விழாக்களை நடத்திட இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்க ஆவன செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தனித்தனியே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.