பவுண்டரிகபுரம் கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
மயிலாடுதுறை: பவுண்டரிகபுரம் சோமநாதசுவாமி கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகத்தில் கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலக எல்லைக்குள்பட்ட கும்பகோணத்தை அடுத்த பவுண்டரிகபுரம் கிராமத்தில் ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கோயிலைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. இவற்றை அகற்றி கோயிலின் பழைய மதில்சுவா் இருந்த இடத்திலேயே மீண்டும் சுவா் அமைக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை சித்தா்காட்டில் உள்ள இந்து சமய அநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
மேலும், கோயிலுக்கு சொந்தமான நஞ்சை மற்றும் புஞ்சை சொத்துக்களை ராஜகோபாலசுவாமி என்ற பெயருக்கு மாற்றியுள்ளனா். வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் ஏராளமாக இருந்தும், தற்போதைய சூழலில் சுவாமிக்கு தீபம் ஏற்றுவதற்கு கூட எண்ணெய் இல்லாத நிலை உள்ளதால், அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற அம்மனுவில் கோரியுள்ளனா்.