மே 1-ல் 241 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்: ஆட்சியா்
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினத்தையொட்டி மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர பொருள்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மக்கள் பிரதிநிதிகள், அந்தந்த ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடா்பான விவரங்களை விவாதிக்கலாம்.