Car: '35 ஆண்டுகள், 100 ஆடம்பர கார்கள்' - ரூ.8500 கோடி மதிப்புள்ள வீட்டை கார் மிய...
தர்மஸ்தல மஞ்சுநாதர் கோயில் குற்றச்சாட்டு: புகார்தாரர் கைது; பெண் `அந்தர்பல்டி' - என்ன நடந்தது?
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடாவில் உள்ள தர்மஸ்தலத்தில் மஞ்சுநாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.
புகார்
கடந்த ஜூன் மாதம், இந்தக் கோவிலின் முன்னாள் தூய்மைப் பணியாளர் இந்தக் கோவில் குறித்து தட்சிண கன்னடா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், "1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்ய சொல்லி என்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினார்கள்.
இதை நான் செய்யவில்லை என்றால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.
பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருக்கிறேன். பெண்களின் உடலில் பாலியல் வன்முறைக்கான காயங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் காணப்படும்.
மஞ்சுநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் உடல் புதைக்கப்பட்டு இருக்கிறது" என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.
விசாரணை
கர்நாடகா பெண்கள் அமைப்பு, `கர்நாடக அமைச்சர் சித்தராமையா இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, கடந்த மாதம், இந்தச் சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு டி.ஜி.பி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் விசாரணையில் புகார்தாரர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். மேலும், குறுக்கு விசாரணையின் போது, அவர் கூறியது பொய் என்பதைக் கண்டுபிடித்துள்ளது சிறப்பு புலனாய்வு குழு. அதனால், புகார்தாரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வளவு நாளாக புகார் அளித்தவரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகவில்லை. இதுவரை, அவரை, 'மாஸ்க்ட் மேன்' என்றே குறிப்பிட்டு வந்தனர்.
அவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், புகார்தாரரின் பெயர் சின்னய்யா என்கிற சென்னா என்ற தகவல் வெளியாகி உள்ளது.
புகாரை மாற்றிய பெண்
சென்னா ஜூன் மாதம் புகார் அளித்ததை அடுத்து, ஜூலை மாதம் ஒரு பெண்ணும் மஞ்சுநாதர் கோயில் மீது புகார் அளித்திருந்தார்.
2003-ம் ஆண்டு, தனது மகள் தர்மஸ்தலாவில் காணாமல் போனதாக அவர் தட்சிண கன்னடாவின் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.
இப்போது, இவரும் அழுத்தத்தினால் தான், அப்படி ஒரு பொய்யைக் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
சென்னா அளித்த புகாரை அடுத்து, அவர் மற்றும் பல்வேறு அதிகாரிகளின் முன்னிலையில், அவர் கூறிய இடங்கள் தோண்டி பார்க்கப்பட்டன.
நேத்ராவதி ஆற்றங்கரையில் உள்ள அந்த இடங்களைப் போலீஸார் ஒன்று முதல் பதினொன்று வரை பிரித்து, ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்தனர்.
அதில் 1 முதல் 5-ம் எண் இடத்திலும், 7 முதல் 10-ம் எண் இடத்திலும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
6-ம் எண் இடத்தில், சில எழும்பு கூடுகள் கிடைத்துள்ளன.
11-ம் எண் இடத்தில், மண்டை ஓடும், 114 எலும்பு கூடுகளும் கிடைத்துள்ளன. கூடவே, பான் கார்டு உள்ளிட்ட சில ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதையடுத்து சென்னாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தான், அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.