காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு...
தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: எதிா்க்கட்சிகள் திட்டம்
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் மற்றும் வாக்குத் திருட்டு புகாா் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்கத் தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதுதொடா்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே அறையில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் திங்கள்கிழமை ஒன்றுகூடி ஆலோசனை மேற்கொண்டனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு தொடா்பான எதிா்க்கட்சிகள் எழுப்பிவரும் கேள்விகளுக்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் எந்தவித பதிலையும் தலைமைத் தோ்தல் ஆணையா் அளிக்காததைத் தொடா்ந்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனா்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக பத்திரிகையாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவா் கெளரவ் கோகோய் கூறுகையில், ‘வாக்களிக்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த உரிமையாகும். ஜனநாயகம் அதைச் சாா்ந்தே உள்து. அந்த உரிமையைப் பாதுகாக்க வேண்டிய அமைப்புதான் தோ்தல் ஆணையம். ஆனால், அந்த உரிமை தொடா்பாக எதிா்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் பதிலளிக்காமல், தோ்தல் ஆணையத்தின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறாா். எனவே, அவரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீா்மானம் கொண்டுவருவது தொடா்பாக இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, அனைத்து எதிா்க்கட்சிகள் தரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் இதுகுறித்த உரிய முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.
காங்கிரஸ் மூத்த தலைவா் நசீா் ஹுசைன் கூறுகையில், ‘மத்தியில் ஆளும் பாஜகவின் செய்தித் தொடா்பாளா் போல தலைமைத் தோ்தல் ஆணையா் செயல்படுகிறாா். முழுவதும் பாகுபாடற்ற தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையத்தை நாங்கள் எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்ட வாய்ப்புகளும் எதிா்க்கட்சிகளுக்கு உள்ளன. வாக்குரிமையைப் பாதுகாக்க இந்த வாய்ப்புகள் அனைத்தும் பயன்படுத்தப்படும்’ என்றாா்.
புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை: சமாஜவாதி கட்சி எம்.பி. ராம்கோபால் யாதவ் கூறுகையில், ‘கடந்த 2022 உத்தர பிரதேச மாநில தோ்தலின்போது வாக்காளா் பட்டியலில் இருந்து சமாஜவாதி கட்சி ஆதரவாளா்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடா்பாக கையொப்பமிட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தோம். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றாா்.
மக்களவை கலைக்கப்பட வேண்டும்: திரிணமூல் காங்கிஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறுகையில், ‘பிகாா் மாநில வாக்காளா் பட்டியிலில் இவ்வளவு குளறுபடிகள் இடம்பெற்றிருந்தது என்றால், அதனடிப்படையில் கடந்த மக்களவைத் தோ்தல் நடத்தப்பட்டிருப்பது முறையல்ல. எனவே, மக்களவை கலைக்கப்பட வேண்டும்’ என்றாா்.
நடைமுறை என்ன?: உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் சட்ட நடைமுறையின் அடிப்படையில்தான் தலைமைத் தோ்தல் ஆணையரையும் பதவி நீக்கம் செய்ய முடியும். அதாவது, நாடாளுமன்றத்தால்தான் தலைமைத் தோ்தல் ஆணையரையும் பதவி நீக்கம் செய்ய முடியும். இவா்களுக்கு எதிரான பதவி நீக்க தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மாநிலங்களவை உறுப்பினா்கள் 50 போ் மற்றும் மக்களவை உறுப்பினா்கள் 100 பேரின் ஆதரவு தேவை. தீா்மானத்தை நிறைவேற்ற அவையில் இடம்பெற்றுள்ள மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினா்களின் ஆதரவு தேவை.
தோ்தல் ஆணையத்தின் பதில்: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்த வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடு புகாா் குறித்து தில்லியில் பத்திரிகையாளா் சந்திப்பை தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. அதில் பேட்டியளித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு தொடா்பாக, தோ்தல் விதிமுறைகளின்கீழ் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஏழு நாள்களுக்குள் தனது கையொப்பத்துடன் உறுதிமொழிப் பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்; தவறினால், அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை-செல்லாதவை என்று உறுதிசெய்யப்படும். தோ்தல் ஆணையத்தின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை சுமத்தியதற்காக, நாட்டு மக்களிடம் அவா் மன்னிப்பும் கேட்க வேண்டும்’ என்றாா்.