அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
தாமிரவருணி மாசடைவதைத் தடுக்கக் கோரிய வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
தாமிரவருணி ஆறு மாசடைவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்க, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் நிபுணரை நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், முத்தாலங்குறிச்சியைச் சோ்ந்த காமராசு தாக்கல் செய்த மனு :
தாமிரவருணி ஆற்றில் கழிவு நீா் கலப்பதால் மாசடைந்து வருகிறது. அதுமட்டுமன்றி, இங்குள்ள படித்துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன. ஆறு மாசடைவதைத் தடுப்பது மட்டுமன்றி, படித்துறைகள், மண்டபங்களை பழைமை மாறாமல் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க திட்ட அறிக்கை ஏதேனும் தயாரிக்கப்பட்டுள்ளதா என பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் வசந்தி பதில் மனு தாக்கல் செய்தாா். அதில், மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணா்தான் முதலில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும்.
தாமிரவருணி ஆறு மாசுபடுவதைத் தடுப்பதற்கான விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்க மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் நிபுணா் ஆலோசகரை நியமிப்பதற்குத் தேவையான பரிந்துரையை வழங்குமாறு நீா்வளத் துறை உயா் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
உரிய அனுமதி கிடைத்தவுடன் ஆறு மாசுபடுவதைத் தடுப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை உடனடியாக சமா்ப்பிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தவிட்டனா்.