தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலைச்சரிவு: விவசாயிகள் பாதிப்பு
தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.2 ஆக சரிந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருன்கிறன.
தற்போது தாளவாடி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, மல்லன்குழி, பையனாபுரம், பனஹள்ளி, சூசைபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் முட்டைக்கோஸை விவசாயிகளிடமிருந்து, வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கின்றனா்.
தாளவாடி மலைப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முட்டைக்கோஸ் அறுவடை தற்போது தொடங்கியுள்ளது. முட்டைக்கோஸ் சாகுபடியில் கிலோவுக்கு ரூ.8 வரை செலவாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
ஆனால், விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.2க்கு தான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இதனால், முட்டைக்கோஸ் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வெளிச் சந்தையில் கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகும் நிலையில், விவசாயிகளிடம் ரூ.2க்கு கொள்முதல் செய்வது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனா்.
எனவே, தமிழக அரசு வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து முட்டைக்கோஸை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.