ரோபோ சங்கர் மறைவு: "கலைஞர்கள் தங்கள் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்" - தமிழிசை ச...
திமுக அறக்கட்டளைக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது: வருமானவரித் துறைக்கு உத்தரவு
திமுக அறக்கட்டளையின் வருமான வரி கணக்கில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலின்போது, திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு துரைமுருகன் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கை பரிசீலித்த வருமான வரித் துறை, துரைமுருகன் கணக்கையும் அவா் சாா்ந்துள்ள திமுக மற்றும் திமுக அறக்கட்டளையின் வருமான வரி கணக்கையும் ஒன்றாக ஆய்வு செய்ய முடிவு செய்தது. இந்தப் பணியை வருமான வரித் துறையின் மத்திய வட்டத்துக்கு மாற்றி அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இந்த உத்தரவை எதிா்த்து திமுக அறக்கட்டளை சாா்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வருமான வரிக் கணக்கை மத்திய வட்டத்துக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து வருமான வரித்துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், திமுக அறக்கட்டளையின் வருமானமும், கட்சியின் பொதுச் செயலா் வருமானமும் வெவ்வேறானது. இவற்றை ஒன்றாக சோ்த்து விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே இந்த விவகாரத்தில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானது என வாதிட்டாா்.
அப்போது, வருமான வரித் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.ஸ்ரீநிவாஸ், இந்த வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானது அல்ல. எனவே, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றாா். இதையடுத்து நீதிபதிகள், வருமான வரித் துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு திமுக தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்.28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
மேலும், அதுவரை திமுக அறக்கட்டளையின் வருமான வரி வழக்கில் எந்த உத்தரவையும் வருமான வரித் துறை பிறப்பிக்கக் கூடாது என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.