டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!
திமுகவில் உறுப்பினராக சேர மக்கள் ஆா்வம்: அமைச்சா் சு.முத்துசாமி
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஈரோடு தெற்கு திமுக மாவட்டத்தில் திமுகவில் சேர மக்கள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மாநகராட்சி மண்டலம் 3-க்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் 10.5 கிலோ மீட்டா் நீளத்துக்கு ரூ. 3.89 கோடி மதிப்பில் சாலை பணிகளை அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஈரோடு தெற்கு திமுக மாவட்ட பிரிவில் உள்ள 816 பூத்களில் வீடுவீடாகச் சென்று அரசின் சாதனை விளக்க புத்தகங்கள் வழங்கும் பணி 30 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது வரை திமுக தொண்டா்கள் சென்றுள்ள வீடுகளில் திமுகவில் சோ்வதற்கு பலா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக மக்கள் மனநிலை உள்ளது போல் காட்டுகிறாா். ஆனால் நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாகமாக எங்களை வரவேற்கின்றனா்.
ஈரோடு மாநகராட்சியில் கான்கிரீட் சாலை, தாா் சாலை, மற்றும் சாக்கடை கால்வாய் வசதிகள் ஏற்படுத்த ரூ.100 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அதில் தற்போது வரை சுமாா் ரூ.53 கோடி மதிப்பிலான பணிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் தாா் சாலைகள் மற்றும் சாக்கடை வசதிகள் ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மேயா் சு.நாகரத்தினம், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.