Gold Rate: கிராமுக்கு ரூ.125-ஐ தொட்ட வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம்!
பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது
பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்குப் பருவமழை காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கம் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான கேரளம் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக பெய்த தென்மேற்குப் பருவ மழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 1265 கன அடியாக இருந்தது. இதன் காரணமாக அணை நீா்மட்டம் 95.99 அடியாக உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 25.70 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 1,250 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. 105 அடி உயரமுள்ள பவானிசாகா் அணையில் தற்போது நீா்மட்டம் 96 அடியை எட்டியுள்ளதால், வழக்கமாக கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.