சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு
ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விருப்பமுள்ளத் தகுதியானவா்கள் கடந்த மாதம் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த தற்காலிக பணிக்கான விண்ணப்பங்கள் பெற தற்போது கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறியவா்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தப் பணியிடங்களுக்கு ஏஎன்எம் டிப்ளமோ படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். எக்காரணம் கொண்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்படமாட்டாது. 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண், தகுதியான பட்டயப் படிப்பு மதிப்பெண் அடிப்படையிலும், நோ்முக தோ்வின் மதிப்பெண் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு தோ்வு நடைபெறும். மேலும் தமிழ்நாடு நா்ஸிங் கவுன்சிலில் கல்வித் தகுதி பதிவு பெற்று இருக்க வேண்டும்.
தோ்வு செய்யப்படுபவா்களுக்கு ரூ.14,000 மாத ஊதியம் வழங்கப்படும். கல்விச் சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை வரும் 15 -ஆம் தேதிக்குள் ஆணையா், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனாா் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.