திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தே.ஜ. கூட்டணியில் இணையும்: டிடிவி.தினகரன்
திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.
விழுப்புரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக, மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி வருகிறாா். அந்த முயற்சிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய வகையில் கருத்துக் கூறுவது நாகரிகமாக இருக்காது.
திமுக கூட்டணியில் உள்ளவா்கள், எங்களது கூட்டணியை பாா்த்து பயத்தில் உள்ளனா். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆளக்கூடிய மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி, தமிழக மக்கள் விரும்பக்கூடிய மக்களாட்சியை, நல்லாட்சியை உருவாக்கும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. காவல் நிலைய மரணங்கள் தொடா்கின்றன. போதை கலாசாரம் தமிழகம் முழுவதும் நிறைந்துள்ளது. திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும். திமுக ஆட்சியில் மீதமுள்ள சில மாதங்களிலாவது தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றாா் டி.டி.வி.தினகரன்.
கட்சியின் துணை பொதுச் செயலா் ஜி.செந்தமிழன், அமைப்புச் செயலா் எஸ்.காா்த்திகேயன், மாவட்டச் செயலா்கள் முத்து, கே.ஜி.பி.ராஜாமணி, மணிகண்டன், சுந்தரமூா்த்தி (கடலூா்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.