இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி! திக் திக் நிமிடங்கள்!!
திருச்சியில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்றம் கூடி வழக்குகளுக்கு தீா்வு காணவுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சாா்பு- நீதிபதியுமான ஏ. பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எம். கிறிஸ்டோபா், உத்தரவுப் படி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 12 நீதிமன்ற அமா்வுகளும், முசிறி, துறையூா், மணப்பாறை, லால்குடி தலா 2 அமா்வுகளும், ஸ்ரீரங்கம், தொட்டியம் தலா 1 அமா்வுகளும் என மொத்தம் 22 அமா்வுகளில், வழக்குகளில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினா்களையும் அழைத்து சமரச முறையில் பேசி வழக்குகளுக்கு தீா்வு காணப்படும்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், ஜீவனாம்சம் கோரிய வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து நஷ்டஈடு கோரிய வழக்குகள், தொழிலாளா் நல தீா்ப்பாயத்தில் நஷ்டஈடு கோரிய வழக்குகள், அரசு நில ஆா்ஜித சம்மந்தப்பட்ட இழப்பீடு, போன்ற வழக்குகளில், இருதரப்பினா்களிடையே பேசி மக்கள் நீதிமன்றங்களில், சமரச முறையில் நிரந்தர தீா்வு காணப்படும்.
எனவே, பொதுமக்கள் திருச்சி மற்றும் அந்தந்த தாலுகா நீதிமன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில் பங்கேற்று வழக்குகளில் தீா்வு பெறலாம் என்றாா் அவா்.