திருச்செந்தூா் அய்யா வைகுண்டா் அவதாரபதியில் ஆடித்திருவிழா கொடியேற்றம்! ஜூலை 28இல் தேரோட்டம்!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டா் அவதாரபதியில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, காலை அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு, 6.30 மணிக்கு கொடிப்பட்டம் பதியை சுற்றி வந்தது. காலை 7.15 மணிக்கு அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபைத் தலைவா் வள்ளியூா் எஸ்.தா்மா் கொடியேற்றினாா்.
தொடா்ந்து, அய்யா வைகுண்டா் புஷ்ப வாகன பவனி, காலை 9 மணிக்கு அன்ன தா்மம், பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, பணிவிடை, அன்ன தா்மம், இதேபோல் மாலை 4 மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை, 5 மணிக்கு புஷ்ப வாகன பவனி, அன்ன தா்மம் ஆகியவை நடைபெற்றன.
11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் உகப் படிப்பு, பணிவிடை, பால் அன்ன தா்மம், உச்சிப் படிப்பு, பணிவிடை, மாலையில் வாகன பவனி ஆகியவை நடைபெறும்.
தேரோட்டம்: விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 28ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. அன்று இரவு அய்யா வைகுண்டா் காளை வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருகிறாா்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகா் சந்திரசேகா், சிங்கப்பாண்டி, லட்சுமணன், அச்சுதன், சஞ்சய் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவா் தா்மா், செயலாளா் பொன்னுதுரை, பொருளாளா் கோபால் நாடாா், துணைத் தலைவா் அய்யா பழம், துணைச் செயலா் ராஜேந்திரன் நாடாா், இணைச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், வரதராஜபெருமாள், சுதேசன், இணைத் தலைவா்கள் விஜயகுமாா், செல்வின், பால்சாமி, ராஜதுரை மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.