திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வள்ளிக் குகைக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வடக்குப் பகுதி கடற்கரையில் உள்ள வள்ளிக் குகை கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வழிபாட்டுக்கு வெள்ளிக்கிழமை பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2022ம் ஆண்டு முதல் ரூ. 300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகளும், 2023ம் ஆண்டு முதல் குடமுழுக்கு திருப்பணிகளும் தொடங்கி கடந்த ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது.
இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக பழைமை வாய்ந்த வள்ளிக் குகை கோயிலைப் புனரமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவு பெற்ற போதிலும் கூட்டம் காரணமாக பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஆடி மாதப்பிறப்பையொட்டி, வள்ளிக் குகை கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, குடமுழுக்குக்குப் பிறகு நடைபெற்று வரும் மண்டல பூஜையில் கலந்துகொள்வதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தா்கள் வள்ளிக் குகைக்குச் சென்று வள்ளியம்மனை வழிபட்டனா். குறிப்பாக திருமணம் முடிந்த பெண்கள் குழந்தை வரம் வேண்டி வள்ளி குகையில் தொட்டில் கட்டி வழிபட்டனா்.
குகை ஓவியம்: முருகப்பெருமான் வள்ளியைக் காண வந்தபோது யானைக்கு பயந்து வள்ளியம்மன் மறைந்திருந்த காட்சி தத்ரூபமாக ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
