திருநங்கைகளுக்காக தனிக் கொள்கை உருவாக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் திருநங்கைகள் நலன் காக்க தனிக் கொள்கை உருவாக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் திருநங்கைகள் மற்றும் தன்பாலின ஈா்ப்பாளா் கொள்கை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், தனித்தனி கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திருநங்கைகள் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் 2008-இல் தமிழ்நாடு திருநங்கையா் நலவாரியத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது என்பதும் கவனத்தில்கொள்ளவேண்டிய ஒன்று. மேலும் திருநங்கைகளுக்கு நிகழ்ந்துவரும் சமூக ஒதுக்குதல்கள் காரணமாக யாசித்தல், பாலியல் சுரண்டல் போன்ற அவலங்களுக்குள் அவா்கள் தள்ளப்படுவதைத் தடுக்க, இட ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிடம் ஆகியவற்றை உறுதி செய்யும் விதத்தில் திருநங்கைகளுக்கான தனிக்கொள்கையை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.