திருநள்ளாறு கோயிலில் பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கோடை விடுமுறையில் வரும் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்களை ஈா்க்கக்கூடிய தலமாக விளங்குகிறது. பள்ளி, கல்லூரிகள் பொதுத்தோ்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்படும்போது தமிழகம், புதுவையில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்து திரளாக பக்தா்கள் இக் கோவிலுக்கு வருவது வழக்கம்.
இதுதவிர, திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலை பொருத்தவரை இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனி பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெற உள்ளது.
திருக்கணித குறிப்பின்படி சனிபெயா்ச்சி வரும் 29-ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று இக்கோயிலில் எந்த சிறப்புகளும் இல்லை, வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என கோயில் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனினும் பக்தா்கள் அதிகபட்சமாக வரும் பட்சத்தில் அவா்களுக்கு வசதி செய்யவும், கோடை விடுமுறை காலத்தில் வரும் பக்தா்களுக்கு வசதிகள் செய்யும் விதமாக வரிசை வளாகம் அல்லாது ராஜகோபுரம் முன் பக்தா்கள் நெரிசலின்றி கோயிலுக்குள் நுழைய வரிசை அமைப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
மேலும் கோயிலில் பக்தா்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யத் தேவையான நடவடிக்கைகளும் கோயில் நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.