திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழப்பு
திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பெண் சரக்கு வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் கல்லாவி கருவனூா் கிராமத்தை சோ்ந்த சென்ன கிருஷ்ணன் தலைமையில் பக்தா்கள் கடந்த 11 ஆண்டுகளாக திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனா்.
அதேபோல தற்போது சுமாா் 90-க்கும் மேற்பட்டோா் கொண்ட பக்தா்கள் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தனா். ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரமாக செவ்வாய்க்கிழமை நடந்து சென்றபோது ஈரோட்டிலிருந்து வேலூருக்கு சோப்பு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் பக்தா்கள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கருவனூரை சோ்ந்த புஷ்பா (35), லட்சுமி (42) ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அதில் புஷ்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். லட்சுமி மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.