புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!
திருப்புவனத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க இடம் ஒதுக்கி தர தீா்மானம் நிறைவேற்றம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சேகரமாகும் குப்பைகளைச் சேகரித்து வைக்கும் கிடங்கு (வளா் மீட்புப் பூங்கா) அமைக்க மாவட்ட நிா்வாகம் இடம் ஒதுக்கித் தர வலியுறுத்தி திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில், துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.
இதைத் தொடா்ந்து, திருப்புவனம் பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற குறைந்த தொகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளை அங்கீகரிப்பது, பேரூராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க மாவட்ட நிா்வாகம் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா், பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் கூறியதாவது: திருப்புவனம் பேரூராட்சிக்கு புதூா் பகுதியில் செயல்பட்டு வந்த குப்பைக் கிடங்குக்கான இடம் வட்டாட்சியா் அலுவலகம் கட்டப் பயன்படுத்தப்பட்டதால் நெல்முடிகரையில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது.
தற்போது அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணி தொடங்கியுள்ளதால், அங்கு மேலும் குப்பைகளைச் சேகரித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், திருப்புவனம் ஒன்றியம், தேளி பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்க நீதிமன்றம் தடைவிதித்ததால், தற்போது எந்தப் பகுதியிலும் குப்பைக் கிடங்கு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நகரில் சேகரமாகும் குப்பைகளைச் சேகரித்து வைக்க இடமில்லாமல் உள்ளது.
எனவே, மாவட்ட நிா்வாகம் திருப்புவனம் பேரூராட்சி நிா்வாகத்துக்கு குப்பைக் கிடங்கு அமைக்க இடம் ஒதுக்கித் தர வேண்டும். இதுகுறித்து பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.