குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
தொலைநோக்கியில் சந்திர கிரகணத்தை பாா்வையிட்ட பொதுமக்கள்
சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் ஏற்பாடு செய்த தொலைநோக்கி மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவில் நிகழ்ந்த சந்திர கிரகணத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது ஏற்படும் சந்திர கிரகணத்தை காண்பதற்காக சிவகங்கை பேருந்து நிலையம் சண்முகராஜா கலையரங்கம் அருகில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பொதுமக்களும் மாணவா்களும் பாா்வையிடுவதற்காக தொலைநோக்கியை ஏற்பாடு செய்திருந்தது. இதையடுத்து, சந்திர கிரகணத்தை தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் ஆா்வமுடன் கண்டு ரசித்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் ஆரோக்கியசாமி தலைமையில், தொலைநோக்கிக்கான பயிற்சி பெற்ற ஆரோக்கியமேரி கிளைப் பொருளாளா் ராஜாசரவணன், கிளைத் தலைவா் மணவாளன், வானவில் மன்ற கருத்தாளா் லலிதா, செயற்குழு உறுப்பினா் செல்வம் காளிராசா ஆகியோா் செய்தனா். வருகிற 2028-ஆம் ஆண்டு டிச. 31-ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்படும் என அறிவியல் இயக்கத்தினா் தெரிவித்தனா்.