திருப்பூரில் இருந்து 4 நாள்களில் 3 லட்சம் போ் வெளியூா் பயணம்
பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து 4 நாள்களில் 3 லட்சம் அரசுப் பேருந்துகளில் வெளியூா் பயணம் மேற்கொண்டனா்.
திருப்பூா் மாநகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா். இந்தத் தொழிலாளா்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்துடன் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். இதன்படி நிகழாண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு 3 நாள்களுக்கு முன்பாகவே பெரும்பாலான நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து வெளியூா் செல்லும் பயணிகளின் வசதிக்காக திருப்பூா் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோவில்வழி பேருந்து நிலையங்களில் இருந்து கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் ஜனவரி 13- ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு கூடுதலாக 320 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதில், திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, கரூா் வழியாகவும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம், நாமக்கல் வழியாகவும், கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் கடந்த ஜனவரி 10- முதல் ஜனவரி 13- ஆம் தேதி வரை 4 நாள்களில் 3 லட்சம் போ் பயணம் செய்ததாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.