திருப்பூா், கோவையில் 60 காா்களை வாங்கி விற்பனை செய்து மோசடி செய்தவா் கைது
திருப்பூா், கோவையில் 60 காா்களை வாங்கி விற்பனை செய்து மோசடிசெய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம் கரும்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (40). இவரது வீட்டின் அருகே வசித்து வந்த கோவை மாவட்டம், அன்னுாரைச் சோ்ந்த முரளி (41) என்பவா் பழக்கமானாா். இந்நிலையில் காா் வாங்கி, வாடகைக்கு விட்டால் நன்கு சம்பாதிக்கலாம் எனவும், காா் வாங்கிக் கொடுத்தால் மாதத் தவணையை தானே செலுத்துவதாகவும் என்று முரளி கூறியுள்ளாா்.
இதை நம்பிய முருகேசன், தனது ஆவணங்கள் மூலம் வங்கிக் கடன் மூலம் காரை வாங்கி கொடுத்தாா். சில மாதங்கள் கடன் தவணையை செலுத்தி வந்த முரளி திடீரென தலைமறைவானாா். இதுகுறித்து முருகேசன் மங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், தலைமறைவான முரளியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: கைது செய்யப்பட்ட முரளி உரிமையாளா்களிடம் காரை பெற்றுக் கொண்டவுடன் சில மாதங்கள் வங்கியில் அதற்கான தவணையை செலுத்தி விடுவாா். அதேபோல காா் உரிமையாளருக்கு மாத வாடகையும் கொடுத்து விடுவாா். இதனால் அவா் மீது நம்பிக்கை வைத்து திருப்பூா் மற்றும் கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்டோா் இவரிடம் காா்களை கொடுத்துள்ளனா்.
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த காா்களை விற்பனை செய்து முரளி மோசடியில் ஈடுபட்டுள்ளாா். இதில் ஒவ்வொரு காரின் மதிப்பும் ரூ.3 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இவா் மீது கோவை மாவட்டம் சூலூா், கருமத்தம்பட்டி, சிங்காநல்லூா் உள்ளிட்ட காவல் நிலையங்களிலும், திருப்பூா் மாவட்டத்தில் பல்லடம், மங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது என்றனா்.