உடுமலையில் 11 டிப்பா் லாரிகள் பறிமுதல்
திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளால் 11 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடுமலை அருகே கோவை - திண்டுக்கல் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் வாகன சோதனையில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 30) ஈடுபட்டனா்.
அப்போது, உத்தர பிரதேச மாநிலம் உள்ளிட்ட வெளிமாநில பதிவெண்களைக் கொண்ட பல லாரிகள் கிராவல் மண், ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு அந்த வழியாக வந்தன. அந்த லாரிகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தனா்.
இதில் லாரிகள் விதிமுறைகளை மீறியும் தமிழக சாலை வரி செலுத்தாமலும் முறையான ஆவணங்கள் இல்லாமலும் இயக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 11 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிற மாநில வணிக வாகனங்கள் முன் அனுமதி, மாநிலத்துக்கான சாலை வரி செலுத்திய பிறகே தமிழகத்தில் இயக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனுமதியைப் புதுப்பித்து வரி செலுத்த வேண்டும்.
இந்நிலையில், இந்த வரிகளை செலுத்தாமல் உடுமலை பகுதியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இயக்கப்பட்ட 11 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதத்துடன் சாலை வரி செலுத்தாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் பிற மாநில பதிவெண்கள் கொண்ட இதர வாகனங்கள் 12 மாதங்களுக்கு மேல் தமிழகத்தில் இயக்கப்பட்டால் முறைப்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றனா்.