ஊதியூா் அருகே வீணாகி வரும் குடிநீா்
காங்கயம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக தண்ணீா் வீணாகி வருகிறது.
காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே காவிரி ஆற்றிலிருந்து தண்ணீா் பம்ப் செய்யப்பட்டு, குழாய்கள் மூலம் முத்தூா், காங்கயம், ஊதியூா், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் தண்ணீா் தேவை பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆங்காங்கே உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலம் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டாலும், பெரும்பாலும் அந்தத் தண்ணீா் குடிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லாததால், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட தண்ணீரையே குடிப்பதற்கும், சமையல் தேவைகளுக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கொடுமுடியிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீா் வரும் வழியில் காங்கயத்தில் இருந்து வட்டமலை, ஊதியூா் வழியாக குண்டடம் வரை ஆங்காங்கே கசிவு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி வருவது தொடா்கதையாக உள்ளது.
இந்த நிலையில் ஊதியூா்-குண்டடம் சாலையில், தனியாா் பால் நிறுவனத்துக்கு அருகே குடிநீா்க் குழாயில் தண்ணீா் கசிந்து அருகே உள்ள மேய்ச்சல் நிலத்தில் பாய்ந்து கடந்த 10 நாள்களுக்கு மேலாக வீணாகி வருகிறது. எனவே சம்பத்தப்பட்ட நிா்வாகத்தினா், குடிநீா்க் குழாய்களை சரி செய்து, கசிவுகளை அடைத்து சீரான முறையில் பொது மக்களுக்கு தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.