திருமண மண்டபங்களில் பட்டாசுக் கடைகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது: வியாபாரிகள் கோரிக்கை
திருமண மண்டபங்களுக்குள் பட்டாசுக் கடைகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று காவல் ஆணையா் சரவண சுந்தரிடம் கோவை மாவட்ட பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சங்கத் தலைவா் சின்னசாமி, செயலா் மு.வ.கல்யாணசுந்தரம், பொருளாளா் சிவகுமாா், துணைத் தலைவா் பிரபு ஆகியோா் அளித்துள்ள இந்த மனுவில் கூறியிருப்பதாவது: வரும் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசுக் கடை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் திருமண மண்டபம், சமுதாயக் கூடம், சினிமா திரையரங்குகள் போன்ற இடங்களில் பட்டாசுக் கடைகள் அமைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த கால அறிவிப்புகளுக்கு முரணாக இருப்பதால், கடந்த ஆண்டுகளில் பின்பற்றிய நடைமுறையையே பின்பற்றி உரிமம் வழங்க வேண்டும். மேலும், கோவை கடை வீதிகளில் பட்டாசு விதிமுறைகளுக்கு உள்படாத பாப் பாப், கலா் புகை போன்ற பட்டாசுகளை உரிமமின்றி விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு முன்பாகவே பட்டாசு விற்பனைக்கான தற்காலிக உரிமம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனா்.