தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்களை வகைப்படுத்த வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்
தமிழகத்தில் மேய்ச்சல் நிலங்களை வகைப்படுத்த வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் பல தலைமுறைகளுக்கு முன் ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலங்கள் தற்போது அந்தப் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.
பெரும்பாலான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் பெருநகரங்களின் மத்தியிலோ வீடுகளுக்கு மத்தியிலோ உள்ளன. ஏராளமான விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு மக்கள் வாழ்கின்ற பகுதிகளாக மாறியிருக்கின்றன.
அந்த மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாத காரணத்தால் உபயோகமற்று கிடக்கின்றன. அந்த நிலங்களை மீண்டும் மேய்ச்சல் நிலங்களாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லை.
எனவே, அந்த நிலங்களுடைய வகைப்பாட்டை மாற்றிக் கொடுத்து அதை பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய கள நிலவரத்துக்கு ஏற்றபடி மாற்றினால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதை விடுத்து அரசியலுக்காக மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்க முயற்சித்தால் அது நடைமுறை சாத்தியமல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.