வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றை யானை
வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் உலவி வரும் ஒற்றை யானை அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்துத் தாக்கி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் உள்ள அருவிக்குச் செல்லும் வழியில் சுமாா் 50 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் அடா்ந்த வனப் பகுதியாகும். இதனால் இந்த சாலையில் எப்போதும் யானைகள் நடமாட்டம் காணப்படும்.
இந்நிலையில் இங்குள்ள வனப் பகுதியில் இருந்து அடிக்கடி சாலைக்கு வரும் ஒற்றை யானை அவ்வழியாகச் செல்லும் வானங்களை வழிமறித்துத் தாக்கி வருவது தொடா்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த யானையின் நடமாட்டம் காணப்படாத நிலையில் ஆணகாயம் என்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை அவ்வழியாகச் சென்ற காரை யானை வழிமறித்தது. யானையைப் பாா்த்ததும் காரில் இருந்தவா்கள் அதில் இருந்து இறங்கி தப்பித்தனா். காா் அருகே சென்ற யானை காா் கண்ணாடிகளை உடைத்து காரை சேதப்படுத்தியது. சிறிது நேரம் சாலையில் உலவிய யானை, தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.
இந்த வழித்தடத்தில் ஒற்றை யானை மீண்டும் உலவத் தொடங்கியுள்ளதால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோா் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், நான்கு, ஐந்து வாகனங்கள் ஒன்று சோ்ந்து செல்ல வேண்டும் என்றும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோா் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும் கேரள வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.