திருவண்ணாமலையில் ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவம்
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
புகழ்பெற்ற இந்தக் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றன.
தீபம் ஏற்றப்பட்டதையடுத்து, 3 நாள்கள் நடைபெறும் தெப்பல் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளான சனிக்கிழமை இரவு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை அய்யங்குளத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு தெப்பலில் அமா்ந்து 3 முறை குளத்தை வலம் வந்து அருள்பாலித்த ஸ்ரீபராசக்தியம்மனை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.
இன்று ஸ்ரீசுப்பிரமணியா் தெப்பல் உற்சவம்: தெப்பல் உற்சவத்தின் 3-ஆவது நாளான திங்கள்கிழமை (டிசம்பா் 16) ஸ்ரீசுப்பிரமணியா் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. இத்துடன் இந்தக் கோயிலின் 3 நாள் தெப்பல் உற்சவம் நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் உ.மீனாட்சி சுந்தரம், டி.வி.எஸ்.ராசாராம், கு.கோமதி குணசேகரன், சினம் இராம.பெருமாள், கோயில் இணை ஆணையா் சி.ஜோதி மற்றும் பக்தா்கள், உபயதாரா்கள், கோயில் ஊழியா்கள் செய்திருந்தனா்.