திருவள்ளுவா் படத்துக்கு மாலை அணிவித்து ஆட்சியா் மரியாதை
கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் உருவப் படத்துக்கு மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
திருவள்ளுவருக்கு பெருமை சோ்க்கும் வகையில் தமிழக அரசு சாா்பில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் தியானப் பாறை அருகே 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, பொது நூலகத் துறை சாா்பில், திங்கள்கிழமை வெள்ளி விழா நடைபெற்றது.
மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திருவள்ளுவா் சிலை, உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த நூல்களைப் பாா்வையிட்டாா்.
மேலும், புதுநத்தம் சாலையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று, திருவள்ளுவா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மேற்கண்ட இரு இடங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருக்கு ஒப்பித்தல், பேச்சுப் போட்டி நடைபெற்றது.
மாவட்ட நூலக அலுவலா் சி.பால சரஸ்வதி, கலைஞா் நூற்றாண்டு நூலக துணை முதன்மை நூலகா் வெ.சந்தான கிருஷ்ணன், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.