திருவள்ளூா் அருகே 1,400 போதை மாத்திரைகள் பறிமுதல்
திருவள்ளூா் அருகே விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான 1,400 போதை மாத்திரை வில்லைகளை பறிமுதல் செய்து, 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
போதை மாத்திரைகளை மா்ம நபா்கள் விற்பனை செய்வதாக திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழரசிக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு போலீஸாா் மற்றும் மணவாளநகா் போலீஸாா் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன்பேரில், திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகத்தின்பேரில், 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் முன்னுக்குப் முரணான தகவல் தெரிவிக்கவே, அவா்களை சோதனை செய்தபோது, போதை மாத்திரை வில்லைகள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சோ்ந்த முகம்மது பிலால் (23), திவாகா் (20) என்பது தெரிய வந்தது. உடனே அவா்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான 1,400 போதை மாத்திரை வில்லைகளை பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து மணவாளநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.